search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் பயணிக்கு இழப்பீடு"

    அரசு பேருந்தில் டிக்கெட் எடுத்தது போக மீதிப்பணம் ரூ.75 தர மறுத்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் பெண் பயணிக்கு ரூ.7 ஆயிரம் நஷ்டஈடு வழங்க அரசு போக்குவரத்து கழகத்திற்கு நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது.
    சென்னை:

    பொன்னேரியை அடுத்த வெலூர் கிராமத்தை சேர்ந்தவர் மலர்விழி. இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2014-ம் ஆண்டு ஆகஸ்டு 4-ந்தேதி திருவெல்லிவாயலில் இருந்து தனது கிராமமான வெலூருக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்சில் பயணம் செய்தார். அவருடன் உறவினர்கள் 4 பேரும் சென்றனர்.

    இவர்கள் பயணம் செய்த பஸ்சில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது கண்டக்டரிடம் மலர்விழி 5 டிக்கெட் தரும்படி கேட்டார். அதற்காக ரூ.100 கொடுத்து டிக்கெட்டுக்கு தலா ரூ.5 வீதம் ரூ.25 போக மீதம் ரூ.75 தரும்படி கேட்டார்.

    அப்போது பஸ்சில் இருந்த 2 பேர் கண்டக்டரிடம் தகராறு செய்தனர். எனவே டிக்கெட்டும், மீதிபணமும் தர கண்டக்டர் மறந்துவிட்டார்.

    இதற்கிடையே அரசு பஸ்சில் டிக்கெட் பரிசோதனை அதிகாரிகள் ஏறி பயணிகளிடம் சோதனை நடத்தினர். அப்போது மலர்விழி, அவரது உறவினர்களிடம் டிக்கெட் இல்லை. எனவே நடந்த விவரங்களை அவரிடம் மலர்விழி கூறினார். அதை டிக்கெட் பரிசோதனை அதிகாரிகள் ஏற்கவில்லை.

    மாறாக டிக்கெட்டுகளை கண்டக்டரிடம் இருந்து பெற்றுக் கொண்ட அவர்கள் தாங்கள் கூறியபடி எழுதி தரும்படி மலர்விழியிடம் கூறினர். பயம் காரணமாக அவரும் அப்படியே எழுதி கொடுத்தார். இதையடுத்து அபராதம் எதுவும் வசூலிக்கவில்லை.

    இதற்கிடையே ஊர் வந்ததும் தான் கொடுத்த 100 ரூபாயில் டிக்கெட் கட்டணம் போக மீதி பணம் 75 ரூபாயை திரும்ப தரும்படி கண்டக்டரிடம் மலர்விழி கேட்டார். ஆனால் அவர் பணம் தர மறுத்துவிட்டார்.

    இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் மேலாளரிடம் 2014-ம் ஆண்டு ஆகஸ்டு 6-ந்தேதி புகார் கடிதம் அனுப்பினார். அதற்கு அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. பின்னர் அதே அலுவலகத்தின் பொது மேலாளருக்கும் 2015-ம் ஆண்டு பிப்ரவரி 17-ந்தேதி புகார் மனு அனுப்பினார்.

    அவரிடம் இருந்தும் எந்த பதிலும் இல்லை. எனவே திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் தனக்கு தரவேண்டிய மீதி பணம் ரூ.75 மற்றும் ரூ.2 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என கேட்டு இருந்தார்.

    வழக்கை விசாரித்த கோர்ட் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மலர்விழிக்கு மீதி பணம் ரூ.75 மற்றும் ரூ.7 ஆயிரம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டது.

    அதில் ரூ.2 ஆயிரம் கோர்ட்டு செலவுக்கும், ரூ.5 ஆயிரம் மனஉளைச்சல் ஏற்படுத்தியதற்காகவும் வழங்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
    ×